விஜய்க்கு 50 கோடி சம்பளமா? ரூ.24 கோடி பணம் , தங்க நகைகள் சிக்கியது உண்மையா?
பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு வரை நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.24 கோடி பணம் , தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான அன்புச்செழியனுக்கு சொந்தமாக தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புச்செழியனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையொட்டி அந்த அலுவலகத்துக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த சோதனையின்போது, நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக அளிக்கப்பட்ட 50 கோடி சம்பளம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யிடம், கேரவேனில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் பனையூரில் உள்ள உங்கள் அறையில் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் தன்னுடைய காரில் வருவதாக விஜய் தெரிவித்தார்.
இதையடுத்து விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். நடிகர் விஜய் தனது காரில் முன்னே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
விஜய்யை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வீட்டுக்கு அதிகாரிகள் விஜய்யை அழைத்து வந்தனர்.
விஜய்யின் தனி அறையில் அவர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. அதோடு அவரிடம் விடிய விடிய விசாரணையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு வரை நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத கட்டுக்கட்டாக ரூ.24 கோடி ரொக்க பணம், பல கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆவணங்கள், வருமான வரித்துறை கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 12 மணி நேரமாக விடிய விடிய இந்த சோதனை நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Comments are closed.