கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை மரணம் – நடந்தது என்ன?

விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்கு மரக்கடை நடத்தி வரும் நிலையில், இவரின் மகன் பென்னிக்ஸ் (31) செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடை வைத்திருந்ததாக கூறி போலீசார், ஜெயராஜை திட்டியுள்ளார்.

Image

இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ்க்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த பென்னிக்ஸ் தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த போலீசாரிடம் சமதான பேச முயன்ற போது, அது கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி பென்னீக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று 22-ம் தேதி இரவில் திடீரென பென்னிக்ஸ் தனக்கு அதிமாக வியர்வை வருவதாக கூறியவாறு கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு பின்புறமுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கடுத்த சில மணி நேரத்தில் பென்னீக்ஸின் தந்தை ஜெயராஜும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் இருவரின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இருவரது சொந்த ஊரான சாத்தான்குளத்தில் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அங்குள்ள காமராஜர் சிலை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி ஜெ.எம்1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்:

நாட்டையே கொரோனா நோய்த் தொற்று பாதித்து பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வாய்த் தகராறு காரணமாக அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா?

போலீஸ் ‘லாக் அப்’பில் இதுவரை நடந்த மர்ம மரணங்கள், இன்று நீதிமன்றக் காவல் என்று சொல்லப்படும் சிறைகளிலேயே பகிரங்கமாக நடக்கின்றன என்றால், இதற்கு உரிய பதிலளிக்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தானே?

மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் இந்நிகழ்வுக்குத் தீர்வு? என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


1,352 thoughts on “கோவில்பட்டி சிறையில் மகன் & தந்தை மரணம் – நடந்தது என்ன?