எப்படி பரவியது கொரோனா வைரஸ்? காரணம் பாம்பு கறி!
சீனாவில் கொரோனா என்ற நவீன வைரஸ் பரவி வருவதால் அங்கு பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த வைரஸுக்கு nCoV என்று உலகச் சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருந்து வந்து இருக்கலாம் எனவும், வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வனத்திலிருக்கும் பாம்புகள் உணவுக்காக அவ்வப்போது வௌவால்களையும் வேட்டையாடுவதுண்டு.
அவ்வாறு வேட்டையாடப்பட்ட வௌவாலின் உடலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாம்புக்குப் பரவியிருக்கலாம். வைரஸ் பரவிய பாம்பு அந்தச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.