கரீபியன் தீவில் பதுங்கி இருக்கும் நித்யானந்தா!
தலைமறைவாக இருந்து வரும் சாமியார் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து 2 சிறுமிகளை காணவில்லை என்று கடந்த நவம்பர் மாதம் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா மீது, கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அவர் தலைமறைவானார்.
அதன் அடிப்படையில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் ‘புளு கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த தகவலை ஆமதாபாத் போலீஸ் துணை சூப்பிரண்டு கே.டி.கமரியா தெரிவித்தார்.
இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை அணுகிய குஜராத் போலீசார், நித்யானந்தாவை பிடிக்க உதவி கோரியதை தொடர்ந்து அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்’ நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நித்யானந்தா கரீபியன் தீவில் உள்ள குட்டி நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.