கொக்கி குமார் தனுஷின் புதுப்பேட்டை 2 – செல்வராகவன் அறிவிப்பு!
தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. ஒரு சாதாரண இளைஞன் ரவுடியாக உருவாவதில் இருந்து எப்படி சறுக்குகிறான் என்ற கதையில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வாழ்ந்திருப்பார்கள்.
வெளியான நேரத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இத்திரைப்படத்தின் வெற்றிக்கு யுவனின் இசையும் பக்கபலமாய் அமைந்திருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல இந்தப் படத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது.
படத்தின் கதை உருவாக்கம், இசை, எடிட்டிங், கேமரா பணி என அனைத்தையும் தற்போது பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். தனுஷின் கொக்கி குமார் கதாபாத்திரத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கொக்கி குமார் கதாப்பாத்திரம் மட்டும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.
புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று செல்வராகவனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இதனால் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை அறிவிப்பை தற்போது இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
கர்ணன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அந்தராங்கி ரே படப்பிடிப்புகள் முடிந்தவுடன் புதுப்பேட்டை 2 படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.