மூத்த அரசியல்வாதி திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் காலமானார்
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98. இயற்பெயர் ராமையா. 1922 டிச.19ல் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பிறந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமம் தான் பேராசிரியர் க.அன்பழகனின் சொந்த ஊர். எம்.கல்யாணசுந்தரம் ஸ்வர்ணாம்பாள் தம்பதிக்கு 1922 டிசம்பர் 19 அன்று பிறந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா ‘பேராசிரியர் தம்பி’ என அழைத்தார்.
அண்ணா மீது அளவற்ற ஈர்ப்பு கொண்டார். ஆரம்ப காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றிய அன்பழகன், பின்னர் நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர அரசியலில் களமிறங்கினார்.
திருவாரூரில் இளைஞர்கள் நடத்திய மாநாட்டில், கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு துவங்கியது.
1957-ல் தனது முதல் தேர்தலில் எழும்பூரில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக அண்ணாவும் துணைத் தலைவராக அன்பழகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 75 ஆண்டு காலம் கருணாநிதியுடன் நட்புடன் இருந்தார். தொண்டர், கட்சி நிர்வாகி என அனைவரையும் அன்புடன் நடத்துவார்.
1977-ல் தொடங்கி இன்று வரை 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளர் என்றால் பேராசிரியர் அன்பழகன் மட்டுமே. கடந்த 1962ல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். லோக்சபா எம்.பி.,யாக (1967-71) பதவி வகித்தார். மீண்டும், தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அன்பழகன், சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார்.
1984ல் ஈழத்தமிழர் கோரிக்கையை வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, நிர்வாகப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் வந்தபோது மு.க.ஸ்டாலினை திமுகவின் செயல்தலைவராக முன்மொழிந்தவரும் இவர்தான். கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினை கட்சியின் தலைவராக்கி அழகுபார்த்தவரும் இவரே.
2018ல் தனது நண்பரும், அப்போதைய தி.மு.க., தலைவருமான கருணாநிதி மறைந்த சோகத்தில் மூழ்கினார். மனம் இறுகியதால், உடல்நிலையும் அன்பழகனுக்கு கைகொடுக்கவில்லை. வயோதிகம் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை காணாமல் தி.மு.க., தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்