ரஜினி சர்ச்சை ட்வீட் – கிண்டல் அடித்த உதயநிதி; கொதித்தெழுந்த சீமான்!
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது.
இந்நிலையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் ரஜினி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வு ஆகாது, கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் இந்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டங்கள் குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி, “எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்றார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று அவர் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை செய்தது யார்?
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்.. அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் ரஜினியின் பதிவு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
Comments are closed.