தர்பார்: ‘தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது – மாற்றுவழியே தீர்வு’

ரஜினியின் ‘தர்பார்‘ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ரஜினிகாந்தின் நடிப்பில் தர்பார் திரைப்படம் நான்கு மொழிகளில் இந்தியா முழுவதும் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு புதுப்படத்தையும் ரிலீஸ் தினத்தன்றே திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தர்பார் படத்தையும் வெளியிடக்கூடும் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

தமிழ் திரைப்படத்துறைக்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக திரைத்துறையினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கோடிக்கணக்கான பணம், பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.

ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வாங்கி பதிவு செய்யும்போது தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் குறித்த தகவலை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து மென்பொறியாளர் சீனிவாசன் கூறிய பதில், “ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை ஆரம்பித்தவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி (who’s data என்றழைக்கப்படுகிறது) தெரிந்துகொள்ளலாம்.”

“ஆனால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக சிலநூறு ரூபாய் கொடுத்து அவர்களது who’s தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம்” என்று அவர் கூறுகிறார்.

“தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை நடத்துபவர்கள் தங்களது டொமைன் ஒவ்வொரு முறை முடக்கப்படும்போதும் சாதாரணமான முறையில் புதிய டொமைனை பதிவுசெய்வதில்லை என்றே கருதுகிறேன். மாறாக, தனிப்பட்ட சர்வரை வாங்கிவிட்டு ஸ்டாட்டிக் ஐபி முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கிறார்கள். “

“அதுமட்டுமின்றி, இணையதளங்களை முறைப்படுத்துவதற்கென சர்வதேச சட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தால் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்திடமோ, அமைப்பிடமோ இதுதொடர்பாக எவ்வித கோரிக்கை வைப்பதிலும் பயனில்லை. உதாரணமாக, தமிழ் ராக்கர்ஸ் ரஷ்யாவை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஐகான் போன்ற அமைப்புகள் விடுக்கும் கோரிக்கையை ரஷ்யா மறுப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது, புதிய டொமைன்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது என்றால் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கேள்வியெழுப்பியபோது, “இணையம் உருவான காலத்திலிருந்து ஹாலிவுட் திரைப்படங்கள் இதுபோன்ற பைரஸி தளங்களின் காரணமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது.

ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் ஹாலிவுட்டால் எட்டமுடியவில்லை. அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது. அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. எனவே, மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சியில் திரையுலகம் ஈடுபட வேண்டும்” என்று சீனிவாசன் கூறுகிறார்.

தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் படத்தை வெளியிடுவதை தடுக்க பட தயாரிப்பு நிறுவனம் முழு மூச்சான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இதற்காக தொழில்நுட்பக் குழுவினரின் உதவியை அவர்கள் நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் இந்தியாவில் இணையதளங்களில் புதிய படத்தை வெளியிட தடை விதித்தாலும் தமிழ் ராக்கர்ஸ் புதிய படத்தை வெளியிடுவது நிறுத்துவதாக இல்லை.



Comments are closed.

https://newstamil.in/