குடியுரிமை சட்ட திருத்த மசோதா – டெல்லியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 13ம் தேதி போராட்டம் நடத்தியதை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பல்கலைக்கழக வளாகம் அருகே ஒன்று கூடினர். அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யா ஓட்டல் முன்பு பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியதால், போராட்டக்கார்கள் மாதா மந்திர் சாலை வழியாக ஜந்தர் மந்தருக்கு செல்ல முயன்றனர்.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் அருகாமையில் இருக்கும் பிரென்ட்ஸ் காலனி பகுதியில் மற்றும் இன்னொரு இடத்தில் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு போலீஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, கைதான 50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்காஜி காவல் நிலையத்தில் இருந்து 35 மாணவர்களும் நியூ பிரென்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் இருந்து 15 மாணவர்களும் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டதாக டெல்லி போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/