நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
மும்பை: பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருக்கு வயது 34.
இந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த். பிஹாரைச் சேர்ந்த இவர் ‘தேஷ் மேன் ஹாய் மேரா தில்’ என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009-ம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் கவனம் பெற்றார். இந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது.
2013ம் ஆண்டு வெளியான கை போச்சே படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் ஹீரோவாக நுழைந்தார். சின்னத்திரை டு சினிமா நடிகராக மாறியவர்களில் இவரும் ஒருவர்.
சமீபத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான், தனது ஃபியான்ஸி உடன் இருக்கும் போது 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது நெஞ்சே உடைந்து விட்டது என மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுஷாந்த் மும்பை பந்த்ராவில், தன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுப் பணியாள் இவரது சடலத்தைப் பார்த்து காவல்துறைக்கு செய்தி கொடுத்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் மறைவு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.