திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடக்கும் : எல்.முருகன் ; கைது செய்ய போலீசார் திட்டம்
பாஜ., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி வேல்யாத்திரையை திருத்தணியில் துவக்க பா.ஜ., தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.
தமிழக பாஜ., சார்பில் நவ.,6 முதல் டிச.,6 வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ‛வேல் யாத்திரை’ நடத்த உள்ளதாக தமிழக பாஜ., தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. மேலும், ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக்கூறி நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்தது.
தற்போது மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்காக கூடுதல் கமிஷனர் அருண், இரண்டு இணை கமிஷனர்கள், மூன்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.