Full Speech : தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக – பெருந்துறையில் விஜய் கடும் தாக்கு
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெறும் முதல் பெரிய பிரசார கூட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
கூட்டத்தில் பேசிய விஜய், “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தையில் திமுகவை எதிர்த்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசினார்கள் என்று நினைத்தேன். இப்போது புரிகிறது. அவர்கள் சொன்னதை மீண்டும் நான் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி… தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கும்தான் உண்மையான போட்டி” என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், “என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இந்த சப்தத்தை ஒருபோதும் முடக்க முடியாது. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். செங்கோட்டையன் நம்முடன் இணைந்தது கூடுதல் பலம். அவரைப் போல இன்னும் பலர் தவெகவில் இணையப் போகிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்” என்றார் விஜய்.
திமுக தரப்பில், விஜய் பேசினால் ‘சினிமா டயலாக்’ என்று விமர்சிக்கப்படுவது குறித்தும் அவர் பதிலளித்தார்.
“நான் பேசினால் சினிமா டயலாக் என்கிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க’ என்று பேசினால் அது சினிமா டயலாக் இல்லையாம்; சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததாம்” என கிண்டலடித்தார்.
“என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்கன்னு சொல்றீங்க. உங்களை எப்படித்தான் சார் புரிஞ்சுக்கிறது? சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலை, பொய் வாக்குறுதிகள் – இதில் உங்களை புரிந்துகொள்ள வேண்டுமா?” என விஜய் கேள்வி எழுப்பினார்.
மேலும், “நான் சொல்வது என் கேரக்டர் அல்ல; மக்களின் கேரக்டர்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய விஜய், “2026 தேர்தலின் கேரக்டரே கொஞ்சம் வேற மாதிரி சார். அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்கள் புரிய வைப்பார்கள்” என எச்சரித்தார். இறுதியாக, “நம்பிக்கையோடு இருங்கள், வெற்றி நிச்சயம்” என்று தனது உரையை முடித்தார்.
பெருந்துறையில் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டம், தவெகவின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கும் முக்கிய மேடையாக அமைந்துள்ளது.
