நெஞ்சுவலியால் சாலையில் துடித்த கணவர்; கைகூப்பி கெஞ்சிய மனைவிக்கு யாரும் உதவாத சோகம் – வைரல் வீடியோ

பெங்களூரு: நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கணவர் சாலையில் துடித்துக் கொண்டிருக்க, கைகூப்பி கெஞ்சிய மனைவிக்கு யாரும் உதவ முன்வராத பரிதாப சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக்கான வெங்கடரமணன் (34) என்பவருக்கு நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி, உடனடியாக அவரை இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எடுக்கப்பட்ட ஈசிஜி பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மனைவி தனது கணவரை மீண்டும் பைக்கில் அழைத்துச் செல்லும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடரமணன் சாலையில் விழுந்து கடும் வலியால் துடித்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கைகூப்பியபடி சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சினார்.

ஆனால், அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எதுவும் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த மனிதநேயமின்மை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு டாக்ஸி ஓட்டுநர் மனிதநேயத்துடன் வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்து, வெங்கடரமணனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இறந்த வெங்கடரமணனுக்கு ஐந்து வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த பேரழிவின் நடுவிலும், அவரது மனைவி மனிதநேயத்தின் உச்சமாக கணவரின் கண்களை தானம் செய்ய முன்வந்து அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, “அவசர நேரங்களில் மனிதநேயத்தை மறக்காதிருக்க வேண்டும்” என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/