மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி 45 நாள்கள் ஆன நிலையில், நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த மாதம் 15ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு அமலாகும்பட்சத்தில், 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உடனடியாக உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளை கேட்டதன் அடிப்படையில் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்பட மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தாா்.

உள்ஒதுக்கீட்டில் இதுவரை…

மாா்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவு.

ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தாா்.

ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை.

செப். 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தாா்.

அக். 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்திப்பு.

அக். 20: உள் ஒதுக்கீடு கோரி ஆளுநருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்திப்பு.

அக். 21: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்.

அக்.22 – அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பதில் கடிதம்.

அக். 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு.

அக். 30: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *