கொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்

தமிழகத்தில் இன்று 3 வயது மற்றும் 5 வயது சிறுமிகள் உட்பட 97 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், புதிதாக 5,864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில், 53 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 7 நாட்களுக்குப் பின்னர் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 5,864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,295 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தமாக 1,78,178 பேர் குணமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 22-ம் தேதி 5849 பேர் பாதிக்கப்பட்டதே குறைந்த பாதிப்பாக இதுவரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் மொத்தமாக 57,962 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லையில் 8 பேரும், தஞ்சையில் 6 பேரும், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேரும், கோவை, செங்கல்பட்டு, கடலூர், தேனி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், திருவாரூர், தென்காசி, புதுக்கோட்டை, காஞ்சீபுரம் , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், மதுரை, சிவங்கை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். அரியலூர், ராணிப்பேட்டையில் தலா ஒருவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.Comments are closed.

https://newstamil.in/