அதிமுக கூட்டணியில் பாமக இணைப்பு: இபிஎஸ் – அன்புமணி இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், பாமகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, இபிஎஸும் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அப்போது பேசிய இபிஎஸ், “ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. தற்போது அந்தக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. தொண்டர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் விரும்பும் வகையில் இந்த கூட்டணி உருவாகியுள்ளது. இது நிச்சயமாக வெற்றிக் கூட்டணி” என தெரிவித்தார்.
மேலும், “மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, வலிமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களை வழங்கும் அரசு அமைய, எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து இரவு–பகல் பாராமல் உழைத்து மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும், தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பாமகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
