‘ஜனநாயகன்’ பாதி படம் கட்! விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்பட தணிக்கை சர்ச்சையால் திடீர் முடிவு?
இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கனத்த இதயத்துடன் இந்த தகவலை ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பகிர்கிறோம். தவிர்க்க முடியாத, எங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் தொடர்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் தான் இந்த முடிவுக்குக் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை குழுவின் உத்தரவின்படி, படத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட அரசியல் வசனங்கள் நீக்கப்பட்டதாகவும், சில சர்ச்சைக்குரிய காட்சிகள் ‘Blacked Out’ செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, படம் வெளியாவதில் சட்டரீதியான மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்வதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
இதனிடையே, ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில்,
“யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பிறகு ஏன் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது? அதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை?” என நீதிபதி பி.டி.ஆஷா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) சார்பில், அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி நடைபெறுவதாக விளக்கினார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
