இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.பி. ஜனநாதன் (வயது 61). தஞ்சை மாவட்டம் வடசேரியில் பிறந்த இவர் பி. லெனின், பரதன் ஆகியோரிடம் முதலில் பணிபுரிந்து உள்ளார். இதன் பின்னர் இயக்குனரானார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் இயற்கை. தேசிய விருது வென்று அவருக்கு பெருமை சேர்த்தது. இதன்பின்னர் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லாபம் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தீவிரமாக பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழ கிழமை மதியம் எடிட்டிங் பணிகளுக்கு இடையே வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவர் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

இதனால், அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். எஸ்.பி. ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்களும், கலைஞர்களும் மற்றும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/