உள்ளூர் தொலைக்காட்சியில் தர்பார்! லைகா அதிர்ச்சி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை மதுரை மற்றும் திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பி லைகா நிறுவனத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸில் இருந்து தர்பார் படத்தை பதிவிறக்கம் செய்த சமூக விரோதி ஒருவர் 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் ஆப்பில் முழுபடத்தையும் பரப்பினார்.
தர்பாரின் வசூலை அடித்து நொறுக்குவோம் என்ற ஆடியோவுடன் இந்த தர்பார் படத்தின் முழு வீடியோவும் பரப்பபட்டதால் தமிழ் திரை உலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ரஜினியின் தர்பார் படத்தை முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த விஜய் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சரண்யா தொலைக்காட்சி உரிமையாளர் மீது ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்பார் படத்தை உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதாக இருவரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
படம் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரண்யா டிவியை நடத்தி வந்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் மற்றும் வகுரணியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம் தர்பார் படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை சிலர் வேண்டுமென்றே கூறி திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.