நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும் – டிஜிசிஏ புதிய விதி தற்காலிக ரத்து

விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இந்தியாவில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பும் என்று தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டிருந்த கடுமையான பாதிப்புக்கு காரணமான புதிய கட்டாய ஓய்வு விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவு டிஜிசிஏ எடுத்துள்ளது.

டிஜிசிஏ அறிக்கையில், கட்டாய ஓய்வு நேர விதி காரணமாக விமானிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தில் சேவை தடங்கல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பல பகுதிகளில் பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையை சரி செய்ய உடனடி நடவடிக்கையாக, டிஜிசிஏ புதிய ஓய்வு விதிகளை நிறுத்தி வைத்ததாக அறிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்:

  • நள்ளிரவு முதல் அனைத்து விமான அட்டவணைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பும்
  • அடுத்த இரண்டு நாட்களில் விமான சேவைகள் முழுமையாக சீராகும்
  • பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் டிக்கெட் தொகையைத் திரும்ப வழங்கும்
  • நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்
  • சேவை தாமதங்களைத் தவிர்க்க அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பிரச்சினைகளை விரைவில் தீர்க்க விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.



https://newstamil.in/