மூணு நம்பர் லாட்டரி ஒரு குடும்பமே தற்கொலை – அதிர்ச்சி வீடியோ

3 நம்பர் லாட்டரி சீட்டால் தங்களின் மூன்று குழந்தைகளுக்கும் சயனைடு கொடுத்து கொலை செய்துவிட்டு, தம்பதி இருவரும் தற்கொலை செய்துகொண்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

சித்தேரிக்கரை பகுதியில் நகைத் தொழிலாளியாக இருந்தவர் அருண். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், 3 நம்பர் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு அடிமையான அருண், அதன் மீது ஏற்பட்ட மோகத்தால் வேலை செய்யும் இடத்திலும், உறவினர்களிடமும் பெருமளவு கடன் வாங்கியிருக்கிறார்.

நகைத் தொழில் நலிவடைந்து வந்ததால் மூணு நம்பர் லாட்டரி சீட்டு பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் அருண். மூன்று எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகள் 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதில் வெற்றியடைந்தால் லட்சக் கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறப்படுவதால் பலரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கடனாளியாகி வறுமையின் உச்சத்துக்கு சென்றவர்களே அதிகம்.

ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அருணுக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்த அருண் குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

இதனால் தனது மூன்று குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடை கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தனது மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்வதாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

நண்பர்கள் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில், “நகைத் தொழில் செய்வதால் பிழைக்க முடியாது. இப்போது என் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டது. நானும் எனது மனைவியும் சாகப் போகிறோம். எப்படியாவது மூணு நம்பர் லாட்டரி சீட்டை மட்டும் ஒழித்துவிடுங்கள். என்னைப் போல் ஒரு பத்து பேராவது பாதிக்கப்படாமல் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

நண்பர்கள் அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பார்க்கும்போது குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் மரணமடைந்து சடலமாக கிடந்துள்ளனர்.

நகைத் தொழில் நலிவடைந்தது வருவது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மூணு நம்பர் லாட்டரி சீட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/