பெரும்பான்மையை நிரூபித்த தவெக அரசு; ஆட்சியை தக்கவைத்த விஜய்!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் அமைச்சரவையில் பொறுப்பேற்றனர். இதையடுத்து, 17வது தமிழக சட்டப்பேரவை மே 11ஆம் தேதி முதல் கூட்டத்தைக் கண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 233 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், திருச்சி துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் புதிய சபாநாயகர் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், தவெக அரசுக்கு மொத்தம் 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். தவெக கூட்டணியுடன் சேர்த்து, சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியினரும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக 22 பேர் வாக்களித்தனர். மேலும் 5 பேர் நடுநிலையாக இருந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியும், திமுக எம்.எல்.ஏக்களும், பிரேமலதாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இறுதியாக, பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்த விஜய் தலைமையிலான தவெக அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/