2026 சட்டசபை தேர்தல்: த.வெ.க. தனித்து போட்டியிடும் விஜய் அறிவிப்பு; 4 முனைப்போட்டி உறுதி! விஜய் பெரம்பூரில் போட்டி?
2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனித்து போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முக்கிய தகவலை விஜய் பகிர்ந்துள்ளார்.
மேலும், த.வெ.க. வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதிய கட்சிகள் தேர்தல் களத்தில் குதிப்பது புதிதல்ல. 2006-ஆம் ஆண்டு தே.மு.தி.க.வும், 2016-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியும் புதிய மாற்றத்தை உருவாக்கியன. அதேபோல், 2026 தேர்தலில் விஜயின் த.வெ.க. முக்கிய புதிய சக்தியாக களம் இறங்குகிறது.
இம்முறை தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணி, விஜயின் த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனி பாதையில் போட்டியிட உள்ளன. இதனால் மாநிலத்தில் நான்கு முனைப்போட்டி நிலை உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்த நான்கு முனைப்போட்டியை மூன்று முனைப்போட்டியாக மாற்றும் முயற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.-வை இணைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
அந்த பேச்சுவார்த்தைகளில், த.வெ.க.-க்கு 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பா.ஜ.க. தரப்பில் முன்மொழிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், த.வெ.க. தரப்பில் விஜய் முதல் 2½ ஆண்டுகள் முதல்வராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டாலும், அ.தி.மு.க. அதற்கு சம்மதிக்கவில்லை. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி இந்த யோசனையை மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், 2026 தேர்தலில் த.வெ.க. தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி, தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், வட சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் டி. நகரில் என். ஆனந்த் போன்ற முக்கியப் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
பனையூர் தலைமையகத்தில் வேட்பாளர் நேர்காணலை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகவும், விஜய்யை முதலமைச்சர் ஆக்குவதே இலக்கு என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில், “தளபதி” தனது பெரும் ரசிகர் பட்டாளத்தை ஒரு தீர்க்கமான அரசியல் சக்தியாக மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
