2026 சட்டமன்ற தேர்தல்: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி; தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி?
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அதற்கு மேலாக 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என்பதே திமுக தலைமையின் நிலைப்பாடாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, காங்கிரஸுக்கு 25 முதல் 27 தொகுதிகள் வரை வழங்கவும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் பங்கு அளிக்கவும் தயாராக இருப்பதாக உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், குறிப்பிட்ட முக்கிய தொகுதிகள் மட்டுமே வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடிப்பதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகுதிகளில் ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டதால், அந்த கோரிக்கைகள் திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சில அமைச்சர்களின் தொகுதிகளையும் காங்கிரஸ் கோருவதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டணியின் சமநிலையை பேணுவது திமுகக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை முன்வைப்பது, தமிழக வெற்றிக்கழகம்-ஐ மனதில் வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவ்வாறு தொடரும் இழுபறி, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மேலும் விரிசலை உருவாக்குமா? அல்லது சமரச முடிவு எடுக்கப்படுமா? என்பதே தற்போதைய தமிழக அரசியல் களத்தின் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
