பால் விலை லிட்டருக்கு ரூ.4-வரை உயர்வு! பொதுமக்கள் வேதனை
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்து வருகிறது.
இதேபோல் தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பால் விலை ஜனவரி 22 முதல் உயர்த்தப்படுகிறது.
பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்துவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக விற்பனை விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி இருக்கின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரித்துள்ளது.
பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என மாடு வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.