கௌதம் மேனனுக்கு அட்வைஸ் செய்த சிம்பு!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து கடந்த வியாழன் அன்று வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதில் இயக்குனர் கௌதம் மேனனை நல்லா வச்சு செஞ்சுட்டாங்க என்பதே பரவலான பேச்சாக இருக்கிறது.

மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னதாகவே ஹோட்டலுக்கு வந்த கௌதம் மேனன் சிம்புவுக்காக காத்திருந்தார். ஆனால் சுமார் ஒன்றே கால் மணி நேரம் கழித்தே சிம்பு ஸ்டைலாக ஹோட்டலுக்கு வந்தார். அதுவரை கௌதம் மேனனோடு பேசிக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் படக்குழுவினர் அவரை தடாலென மறந்துவிட்டு சிம்புவை வரவேற்க ஓடினர். கௌதம் மேனன் மட்டும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். படக்குழுவினர் புடை சூழ நடிகர் சிம்பு லிஃப்டில் ஏறி நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு செல்ல, இயக்குனர் கௌதம் மேனன் மட்டும் தனியாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்று ஒரு ஓரமாக அமர்ந்தார்.

நிகழ்ச்சி தொடங்கும் வரை சிம்புவும் கௌதம் மேனனும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் பேசிக்கொள்ளவில்லை. மேடையில் பேசிய கௌதம் மேனன், நல்லா தூங்கிட்டு படம் பார்க்க வாங்கன்னு சொன்னேன், நான் சொன்னதை பெரிதாக்கிவிட்டார்கள் என வேதனைப்பட்டார். நடிப்பது மிகவும் கடினமான விஷயம் என்றும் தான் நடிக்கத் தொடங்கியதுபோது அதனை உணர்ந்து கொண்டதாகவும் கூறிய கௌதம் மேனன் சிம்புவின் நடிப்பு குறித்து பேசினார். அப்போது சிம்பு இயக்குனரை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தார்.

தொடர்ந்து பேசிய சிம்பு, என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இதுதான் முதல் முறை, எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது, இந்த கதையை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன்.

அட்வைஸ் செய்த சிம்பு

மேலும், அடுத்த படத்தை எப்படி எடுக்கவேண்டும் என கௌதம் மேனனுக்கு பாடம் எடுத்தார். படத்தின் அடுத்த பாகத்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக எடுக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு இருக்கவேண்டும் என்றும் அட்வைஸ் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி ஜெ.கணேஷ், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நன்றாக நடித்ததாகவும் அவர் ஜனாதிபதி அவார்டு வாங்கணும் எனவும் சிம்புவைப் பற்றியே பாராட்டிப் பேசியதோடு போகிற போக்கில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு குட்டு வைத்தார். இது கெளதம் மேனன் படம் இல்லை அவரோட படம் மாதிரியே வந்த வேற படம் என்று சொல்ல கௌதம் மேனன் திருதிருவென விழித்தார். சிம்பு சொன்னது போல பாகம் 2 ஜாலியா, ஜனரஞ்சகமா இருக்கனும். பாகம் 2 வேற மாறி இருந்தாதான் நான் எடுப்பேன் என்றும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினார் போல் கௌதம் மேனனை வறுத்தெடுத்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *