கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கையில் சந்தேகம் – உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள்!
தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுக்க கவனம் ஈர்த்தது. இந்த தொடர்பில் சுதந்திரமான விசாரணைக்கான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
கரூர், மதுரை கிளை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், சென்னை உயர்நீதிமன்றம் மாநில காவல்துறையினரை மட்டுமே கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்க உத்தரவிட்டது எவ்வாறு நியாயமானது?
மேலும், அந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அரசியல் பேரணிகளுக்கான SOP உருவாக்கம் குறித்து மட்டுமே இருந்த நிலையில், அதே மனுவில் SIT விசாரணை உத்தரவு வெளியிடப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அக்டோபர் 13 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட இடைக்கால தீர்ப்பில், பதிவாளர் இந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்ந்தார் என்பதை விளக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியிருந்தது. அந்த அறிக்கையை தற்போது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆய்வு செய்துள்ளது.
நீதிபதி மகேஸ்வரி,
“உயர் நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது. இது சரியான நடைமுறை அல்ல,” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.
மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன்,
“எதுவாக இருந்தாலும், உயர்நீதிமன்றம் தங்களது முன் வரும் ஒவ்வொரு விவகாரத்துக்கும் உத்தரவை வழங்குவர்,”
என பதிலளித்தார்.
இதற்கு நீதிபதி மகேஸ்வரி,
“நடைமுறை தவறாக இருந்தால்?” என்று திடீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பதிவாளர் அறிக்கைக்கு எதிர் தரப்பின் பதிலும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவில் “native” (அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்லாதவர்) என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தெளிவாக நிராகரித்தது.
அதேபோல், மாநிலம் அமைத்த விசாரணைக் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
வில்சன், அந்தக் கமிஷன் சிபிஐ விசாரணையில் தலையிடாது, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் பரிந்துரைகளையே வழங்கும் என தெரிவித்தாலும், உச்ச நீதிமன்ற அமர்வு இதனை ஏற்காமல் அதன் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்துள்ளது.
