அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, மேலும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பை சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அந்த வகையில் அதிமுக பொதுக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதிமுகவை செயல்படவிடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 2ஆவது வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் அதிமுக பொதுக் குழுவில் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும். அதிமுக பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்கிறோம். அது போல் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வும் செல்லும் என கூறிய நீதிபதிகள் ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.



Comments are closed.

https://newstamil.in/