சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி!
சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி, சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள விமான நிலையங்களிலும் மருத்துவ குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த பரிசோதனையின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 பெண்களும், 47 வயதான சீன நாட்டவர் ஒருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல், சளி தொல்லை ஆகியவையே கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்கிற தகவலும் பரவி இருப்பதால் அது போன்ற உடல்நல கோளாறுடன் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப் பட்ட பிரத்தியேக வார்டில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், அந்த 6 பேரில் 3 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 3 பேர் திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் தலா ஒருவர் வீதம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Comments are closed.