சீனா மோதலின் போது நடந்தது என்ன? இந்திய வீரர்களைத் தாக்க முள் நிறைந்த கம்பிகள்!

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. இதனால், எல்லையில் பதற்றம் காணப்பட்டது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன ராணுவம் தங்கள் நிலைக்கு செல்வதாக சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி எல்லையில் இருந்து சீனப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்தது. ஆனால் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Image

இந்நிலையில் லடாக் எல்லையில் இந்திய – சீன வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறையிடத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த தாக்குதலின் போது துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை. கைலப்பில்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரு நாட்டு எல்லையையொட்டிய 2 கி.மீ சுற்றளவுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்கிற விதி வரையறுக்கப்பட்டுள்ளது

Image

இதனால், சீன ராணுவத்தினர் முன்கூட்டியே முனை போன்ற கூரான இரும்புக்கம்பியை தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இது போன்ற கம்பியை வைத்து சீன வீரர்கள் தாக்கியதால்தான் இந்திய தரப்பில் 16 பேர் கொடூர தாக்குதலிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதே போன்ற கம்பியைத்தான் கடந்த மே 18 , 19- ந் தேதிகளில் சீன ராணுவம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வானில் இந்திய வீரர்களின் உடல்களும் சீன வீரர்களால் சிதைக்கப்படுள்ளதும் இந்திய ராணுவத்தின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மலைச்சரிவான பகுதியாகும். இருதரப்பு சண்டையின் போது இருதரப்பு வீரர்களும் மலையில் இருந்து தவறி விழுந்துள்ளனர். இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 16 பேர் கொடூர தாக்குதலிலும், 4 பேர் மலையில் இருந்து கீழே விழுந்தும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதேபோல சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், வீரர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் சீனா வாய் திறக்காமல் மவுனம் காக்கிறது.

Image

இதற்கிடையே , சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் ஷாங் சூய்லி கூறுகையில், ” கல்கான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், சீன ராணுவ உயிரிழப்பு குறித்து விரிவாக எதுவும் பேச முடியாது ”என்று கூறியுள்ளார். இதனால், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/