Sasikala Quits Politics – சசிகலா அரசியலுக்கு முழுக்கு
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா இன்று திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறைவாசம் முடிந்து வந்ததும், தமிழகத்தில் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும், அரசியலில் முக்கிய நபராக மாறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான அம்மாவின் உணமைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.