ரூ.60,000 சம்பளம் வாங்கியவருக்கு; ரூ.132 கோடி வரி ஏய்ப்பு நோட்டீசு
மத்தியபிரதேச மாநில ஏழை தொழிலாளி ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு, ரூ.132 கோடி வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக புகார் கூறி, வருமான வரித்துறை 3.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீசு அனுப்பி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் மோகனா என்ற இடத்தை சேர்ந்தவர் ரவி குப்தா என்பவர், பி.பி.ஓ., நிறுவனத்தில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் வங்கிக் கணக்கில், 2011-12ம் நிதியாண்டில், 132 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்திருப்பதை, வருமான வரித் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து, அத்தொகைக்கு, ‘வரி மற்றும் அபராதமாக, 3.50 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, ரவி குப்தாவுக்கு, குவாலியர் வருமான வரி அலுவலகம், ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ரவிகுப்தா குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்துவதாகவும் அதில் 2011 செப்டம்பர் 9-ந்தேதி முதல் 2012 பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை வங்கி கணக்குக்கே பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரவி குப்தா அதிர்ச்சி அடைந்தார். விசாரணையில், சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனம் ஒன்று, மும்பை அலுவலகம் மூலம், ரவி குப்தாவின், ‘பான்’ எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்தி, 132 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொண்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக, ரவி குப்தா, குவாலியர் மற்றும் லுாதியானா போலீசில் புகார் அளித்த போது, அவரை மும்பை போலீசில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.மும்பை போலீசில் கூறினால், பணப் பரிவர்த்தனை செய்த மோசடி கும்பலால் தனக்கு ஆபத்து நேரலாம் என, ரவி குப்தா அஞ்சுகிறார்.
அபராதம் செலுத்த தவறினால், வங்கிக் கடனில் வாங்கிய வீட்டை, வருமான வரித் துறை முடக்கி விடும் எனவும் கவலைப்படுகிறார்.
இதுபற்றி ரவிகுப்தா கூறும்போது, ஏற்கனவே வந்த நோட்டீசுகளை பார்த்தபோது ஏதோ தெரியாமல் அனுப்பிவிட்டார்கள் என நினைத்தேன். ஆனால் இப்போது எனது சொத்துக்களை பறிமுதல் செய்வதாக கூறி இருப்பதால் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு 2 இடத்தில் சொத்து இருக்கிறது. அதை பறித்து விடக்கூடாது என்பதற்காகவே வருமான வரித்துறைக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.