பைக் திருடும் 19 வயது கஞ்சா சந்தியா!

தமிழகத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் மிக அதிகமாக நடந்து வருகின்றன. ஒருவர் சிறுக சிறுக சேமித்த பணத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய வாகனத்தை, கொள்ளையர்கள் மிகவும் எளிதாக திருடி சென்று விடுகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து இருப்பது போல நடித்து டியோ ஸ்கூட்டரை கள்ளச்சாவி போட்டு திருட முயன்ற இளம் பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் தனது டியோ ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு தெருவில் நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரு இளம் பெண்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்.

அக்கம் பக்கம் நோட்டமிட்ட இந்த பெண்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராபத்தின் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றது.

இதை வீட்டின் சிசிடிவி திரையில் கண்ட யாசர், உஷாராகி வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் விரட்டிச்சென்ற போது அதில் ஒரு பெண் களவாணி மட்டும் சிக்கினாள்.

விசாரணையில் அந்த பெண் 19 வயது கஞ்சா வியாபாரி சந்தியா என்பதும் அவருடன் வந்தது மோசடி மோனிஷா என்பதும் தெரியவந்தது. சந்தியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர் கள்ளச்சாவியை கையில் கொடுத்து இருசக்கர வாகனத்தை திருடச்சொன்ன மோசடி மோனிஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/