தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் இல்லை நடிகர் சூர்யா வேதனை!
கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யா அடையாளம்
நடிகர் சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே, பெரும்பாலான அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
பள்ளிகளில் சாதிப்பெயர் சொல்லி ஆசிரியர்கள் திட்டுவது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். சமூகத்தை பற்றியும் யோசிப்பது தான் வாழ்க்கை என தெரிவித்த அவர், குடும்பம், சமூகம், செய்யும் தொழில் மூன்றுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய சூர்யா, நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன் என்று உறுதியளித்த அவர், சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றார்.
முன்னர் பேசிய நடிகர் கார்த்தி, வாழ்க்கையில் யாருடன் உங்களை ஒப்பிட வேண்டாம் எனக் கூறினார். அடுத்தவரின் வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், இன்னும் 100 படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், “அகரம்” தான் சூர்யாவின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதேபோன்று உழவன் ஃபவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்று கூறினார். நேர்மையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் வாழ்வில் உயரலாம் என்றும் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.