ஜிப்ஸி விமர்சனம்

இயக்குனர் ராஜூ முருகன் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் தோலுரித்து காட்டுவது இவரது சிறப்பு, ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்ஸி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார். ஜிப்ஸி எப்படிப்பட்ட படம் வாங்க பாக்கலாம்.

ஜிப்ஸி விமர்சனம்
  • Critic's Rating
  • Avg. Users' Rating
3.8

ஜிப்ஸி விமர்சனம்

காஷ்மீரில் பிறந்து வளர்ந்த ஜீவா பெயர் தான் ஜிப்ஸி போரில் பெற்றோரை இழக்க குதிரைக்காரர் ஒருவரால் வளர்க்கப்படுகிறார். நாடோடியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களுக்கு சுற்றி திரிகிறார்கள்.

ஒரு நாள் அந்த குதிரைக்காரர் ஜீவாவிடம் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஜிப்ஸி குதிரையை வைத்து வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்துகிறார் ஜீவா . ஆதரவற்ற ஜீவாவுக்கு சே என்னும் அந்த குதிரையே நண்பனாக இருக்கிறான்.

ஊர், ஊராக சுற்றும் ஜிப்ஸி நாகூருக்கு வரும்போது வஹீதா (நடாஷா சிங்) மீது காதல் ஏற்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த வஹீதாவுக்கு ஜீவா மீது காதல் வர இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள், இதனால் அங்கு என்னென்னவோ எதிர்பாராத கொலை சம்பவங்கள் நடக்கிறது.

வட மாநிலத்தில் திருமணம் செய்து வாழ்கிறார்கள். வஹீதா கர்ப்பிணியாக இருக்கும்போது ஏற்படும் மதக் கலவரத்தால் கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையாக பிரிகிறார்கள். உதவியாளரும், குதிரையும் கொல்லப்பட ஜீவா துடிதுடித்துப்போகிறார்.

இதற்கிடையில் ஜீவா கைது செய்யப்பட்டு போலிஸில் சித்ரவதைக்கு ஆளாகிறார். அதன் பிறகு சேர்ந்தார்களா இல்லையா கர்ப்பமாக இருக்கும் ஹீரோயின் என்ன ஆனார்? ஜீவா விடுதலையானாரா? என்பதே கதை.

நீண்ட காலமாக ஒரு வெற்றியை பதிவு செய்ய காத்திருந்தார் ஜீவா அது நடந்திருக்குனு தான் சொல்லணும், இப்படம் அவருக்கான சரியான களம் என்றே சொல்லலாம். அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜீவாவின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

நாயகி நடாஷா அதிகம் பேசவில்லை என்றாலும் தன்னுடைய பார்வையாலே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.ஊர் பக்கம் இருக்கிற சாதாரண குடும்பத்து பெண் போல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடப்பதும், அதே வேளையில் காதல் அலையில் சிக்கும் போது கட்டுப்பாட்டை மீறுவதும் உணர்வுப்பூர்வமான நடிப்பு எனலாம்.

மனிதம் மட்டுமே புனிதம் என்பதை உணர்த்த முயற்சி செய்திருக்கிறார் ராஜுமுருகன். இயக்குனர் ராஜூ முருகன் ஏற்கனவே ஜோக்கர் படத்தின் மூலம் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு, அரசின் செயல்பாடுகளுக்கும் சொற்களால் அடி கொடுத்தார்.

சர்ச்சைகளுக்கிடையில் தேர்தலுக்கு பின் வெளியானாலும் வெற்றி பெற்று தேசிய விருதை தர அந்த தைரியம் தற்போது அவரை ஜிப்சி படத்தை கொடுக்க வைத்துள்ளது. அழகான திரைக்கதையில் சென்சார் பல இடங்களில் கையை வைத்ததால் படம் தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது. மத அரசியல் செய்வோரையும், அதற்காக கட்டவிழ்த்து விடப்படும் கலவரங்களையும், சமகால அரசியல் தீவிரவாதங்களையும் ஜிப்சியில் தோலுரித்துள்ளார்.

துணிச்சலாக சில விஷயங்களை கையாண்ட ராஜுமுருகன் சொல்ல வரும் சேதியை சரியாக பதிவு செய்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம்: ஜீவா, நடாஷாவின் நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை. செல்வகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியுள்ளது.

படத்திற்கு பலவீனம்: இரண்டாம் பாதி காட்சிகள் சுற்றிய இடத்திலே சுற்றுவது போல ஒரு ஃபீல்.

மொத்தத்தில் ஜிப்ஸி சாமானியரின் குரல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *