பிரபுதேவா பஹிராவில் சைக்கோ மொட்டைத் தலை
பிரபுதேவா நடிக்கும் பஹிரா படம், சைக்கோ, மிஸ்டரி த்ரில்லர் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரபுதேவா கடைசியாக தேவி 2 படத்தில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள ‘யங் மங் சங், பொன் மாணிக்கவேல்’ படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், படத்துக்கு ‘பஹிரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் பிரபுதேவா, மொட்டை அடித்து, வித்தியாசமான கண்ணாடி அணிந்து புதுமையாக தோற்றத்தில் இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
பஹிரா பற்றி ஆதிக் கூறுகையில், ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்தபோது இந்த படத்தின் கதையை கேட்டார். தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்து விட்டு இதில் நடிக்கிறேன் என்றார். அதன் பிறகு இந்திக்கு போய்விட்டார். நான் அவருக்காக காத்திருந்தேன். இந்திப் படம் முடிந்த கையோடு வந்து நடித்தார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டன.
இந்தப் படம், நிச்சயமாக அவரை வேறு கோணத்தில் காட்டும். இதுவரை பிரபுதேவாவை நடனத்தில் கலக்குபவராக, ரொமான்ஸ் பண்ணுபவராக, காமெடி பண்ணுபவராகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படம் வேறுவிதமாக அவரை காட்டும். அவர், பிரமாதமான நடிகர் என்பதை படப்பிடிப்பின்போது தெரிந்துகொண்டேன்.
இது ஒரு சைக்கோ மிஸ்ட்ரி த்ரில்லர். பஹிரா என்பது ஹாலிவுட் படமான ஜங்கிள் புக்கில் வரும் ஒரு கேரக்டரின் பெயர். அதேமாதிரியான குணாதிசயங்களை கொண்டவர் என்பதால் பிரபுதேவா கேரக்டருக்கு அந்த பெயர் வைத்திருக்கிறேன். இதுவரை பிரபுதேவாவை பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் இப்படத்தில் பார்க்கலாம். என்றார்.
இலங்கை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் முடிவடைகிறது.