நடிகர் விசு காலமானார்

1941-ம் ஆண்டு பிறந்த விசு, தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

1981ல் தில்லு முல்லு படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர், கண்மணி பூங்கா படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

மணல் கயிறு என்னும் மெகா ஹிட் படத்தில் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர் என தனது பன்முக திறனை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தார். அடுத்தடுத்து தொடர்ந்து இயக்கத்திலும் நடிப்பிலும் அசத்திய விசு, கடைசியாக 2013ம் ஆண்டு அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று (மார்ச் 21) மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சென்னை, துரைப்பாக்கத்தில் மனைவி உமா மற்றும் 3 மகள்கள் என குடும்பத்துடன் வசித்து வந்த விசு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/