“மக்களால் நிராகரிக்கப்பட்டது திமுகதான்”.. உதயநிதிக்கு விஜய் கடும் பதிலடி!

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மான விவாதம் அரசியல் சூட்டை கிளப்பிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் நிராகரிக்கப்பட்ட திமுகவுக்கு எங்களை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. தோல்வியில் இருந்து கூட திமுக இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” என்று விமர்சித்தார்.

மேலும், “எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக திமுக தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால் யதார்த்தம் மட்டும் அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. மக்கள் கொடுத்த தோல்வியால் திமுக திக்கித்திணறி வருகிறது. அதனால் தான் எங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குகிறது” என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசுக்கு கிடைத்த ஆதரவை குறிப்பிட்ட விஜய், “144 எம்.எல்.ஏக்கள் நமது அரசுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது மக்கள் அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என்றார்.

மேலும், தேர்தல் வாக்கு சதவீதத்தையும் எடுத்துக்காட்டாக கூறினார். “தவெக தனித்து போட்டியிட்டு சுமார் 35 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் திமுகவின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் 24 மட்டுமே. கூட்டணி இல்லாமல் திமுகவால் இந்த அளவுக்குக் கூட வர முடியாது” என்று விமர்சித்தார்.

மேலும், “நாம் பெற்ற வாக்குகள் திமுகவை விட அரைக் கோடிக்கும் அதிகம். இதெல்லாம் நாங்கள் சொல்லும் கணக்கு இல்லை, தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்கள்” என்று குறிப்பிட்டார்.

திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், “76 சதவீத மக்கள் திமுகவை நிராகரித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, எங்களை ஏளனமாக பேசுவதற்கு என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில், தனது அரசு மதச்சார்பற்ற மற்றும் சமூகநீதிக் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். “அதனால்தான் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தன” என்றார்.

மேலும், “ஆதாரப்பூர்வமான குறைகளை யார் சொன்னாலும் அதை ஏற்று திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் எங்களுக்கு உள்ளது. ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றும் விஜய் கூறினார்.

திமுகவை நேரடியாக சாடிய அவர், “ரீல்ஸ் உலகில் மிதக்கும் திமுக இன்னும் ரியாலிட்டியை புரிந்துகொள்ளவில்லை. மக்கள் உணர்வுகளை நம்பித்தான் நாங்கள் அரசியல் செய்கிறோம்” என்றார்.

இறுதியாக, “எங்களை எவ்வளவு விமர்சித்தாலும் மக்கள் நலனே எங்களுக்கு முதன்மை. அமைதியாகவே பல சாதனைகளை செய்து காட்டப்போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் நமது அரசு தொடர்ந்து செயல்படும்” என்று விஜய் உறுதியளித்தார்.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/