Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatestREVIEW

வா வாத்தியார் Movie Review: எம்ஜிஆர் ஸ்டைலில் கார்த்தி – பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமா?

Movie Rating:⭐ 2.5 / 5

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த இந்த படம் தற்போது ரசிகர்களை சந்தித்துள்ளது.

மாசிலா என்ற ஊரில் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கும் ராஜ்கிரண், எம்ஜிஆர் மறைந்த அதே நாளில் பிறந்த தனது பேரனை, எம்ஜிஆர் போல் வளர்க்கிறார். அந்த பேரனாக கார்த்தி. எம்ஜிஆர் போலவே தோற்றம், நடை, உடை, மீசை, ஸ்டைல் என அனைத்தையும் பின்பற்றி வளர்ந்த கதாபாத்திரம்.

கார்த்தி எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் எளிதாக நடித்து விடும் நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தில் அவர் அணிந்துள்ள ஆடைகள் அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர். எம்ஜிஆர் காலத்து இளைஞர்களை நினைவுபடுத்தும் அவரது லுக் ரசிகர்களை கவர்கிறது.

“எம்ஜிஆர் காட்டிய நல்வழியில் கார்த்தி செல்கிறாரா?” என்ற ஒன்லைன் கதையை மையமாக கொண்டு படம் நகர்கிறது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை கொடுத்த நலன் குமாரசாமியிடம் இருந்து இன்னும் வலுவான திரைக்கதை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் அழுத்தம் குறைவாகவே உள்ளது.

படத்தில் உணர்ச்சி (Emotion) காட்சிகள் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற ஒரு நல்ல பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக இது அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சில காட்சிகள் ஜவ்வு போல இழுக்கின்றன என்பதும் உண்மை.

கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு பாராட்டுக்குரியது. அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராஜ்கிரண் வரும் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சத்யராஜின் தோற்றம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடைவேளையில் வரும் ட்விஸ்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கார்த்தி – எம்ஜிஆர் கண்ணாடி வழி சந்திக்கும் காட்சி, இடைவேளைக் காட்சியின் எடிட்டிங் மற்றும் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடல் ஆகியவை ரசிக்க வைக்கின்றன.

2 மணி நேரம் 9 நிமிடங்கள் ஓடும் இந்த படம், மெய்யழகன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு நல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது என்று சில ரசிகர்கள் பாராட்டுகின்றனர். பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகாத நிலையில், வா வாத்தியார் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் ஒரு குடும்பத் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.