முட்டைகளில் புற்றுநோய் ஆபத்து? தமிழகமெங்கும் தீவிர ஆய்வு – உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை

முட்டைகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட ஆன்டிபயோடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, முட்டை உற்பத்தி அதிகமாக நடைபெறும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த நைட்ரோஃப்யூரான் (Nitrofuran) என்ற ஆன்டிபயோடிக் மருந்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மருந்துக்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டது.

இந்த மருந்துகள் கால்நடை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தக் கூடாது என கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்று தயாரித்த முட்டைகளில் நைட்ரோஃப்யூரான் மருந்து கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகளைத் தொடங்கின. மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையும் முட்டைகளை பரிசோதனை செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பி.செந்தில்குமார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் உணவின் தரமும் பாதுகாப்பும் உறுதி செய்ய அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே முட்டை வர்த்தகம் நடைபெறுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நைட்ரோஃப்யூரான் தொடர்பான அபாயம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை” என்றனர்.

மேலும், உற்பத்தி மையங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த ஓரிரு வாரங்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனவும், முட்டைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.



https://newstamil.in/