“காந்தி பெயர் நீக்கம் கொலையைவிட கொடியது” – ப.சிதம்பரம் கடும் கண்டனம்

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய சட்டத்தை அமல்படுத்துவது, காந்தியடிகளை கொலை செய்ததைவிட கொடிய செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை கொண்ட விபி-ஜி ராம் ஜி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிச்சுமை விதிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.

குறிப்பாக, மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்திலிருந்து நீக்கியிருப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், “மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளை கொலை செய்ததைவிட கொடிய செயல். காந்தியடிகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு காழ்ப்புணர்வு உள்ளது என்பதை இந்த ஒரே நடவடிக்கை வெளிப்படுத்துகிறது” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர், “காந்தியடிகளின் பெயரையும் நினைவையும் அழித்து விட்டு, யாரை இவர்கள் தேசப் பிதாவாக முன்னிறுத்தப் போகிறார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன். இந்தியாவின் வரலாறு 2014-ம் ஆண்டில்தான் தொடங்கியது என கூறுபவர்கள், இனி எத்தனை கொடுமைகளைச் செய்வார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

இறுதியாக, “தென்னாட்டை பின்பற்றி ஒரு நாள் வடநாடு திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்” என ப.சிதம்பரம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/