ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கியது! சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருவது நகைப் பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை குறைத்ததே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்புகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை வேகமாக உயர்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அப்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதன் பின்னர் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு, கடந்த மாதம் (நவம்பர் 5) ஒரு சவரன் தங்கம் ரூ.89,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இம்மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயரத் தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இம்மாத ஆரம்பத்திலேயே ரூ.96 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. கடந்த 12-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த இரண்டு நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், இன்று திடீரென அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. இதன் மூலம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.213-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 13 ஆயிரம்-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு, திருமணம் மற்றும் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீது மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/