திருப்பரங்குன்றம் விவகாரம்: தீபம் ஏற்ற முயற்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு – இந்து அமைப்பினர் 13 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்றபோது புதன்கிழமை ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தையடுத்து, மதுரை காவல்துறையினர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளனர்.
உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் அல்லாது, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி புதன்கிழமை மாலை தூணில் மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடுகள் பிற்பகலில் நடைபெற்று, தேவையான மண் பானை, நெய், திரி உள்ளிட்ட பொருட்கள் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் மாலை 4 மணிக்கு அந்தப் பொருட்களெல்லாம் மீண்டும் கீழிறக்கப்பட்டன.
மாலை 6.05 மணிக்கு உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மலைப் பாதையின் அருகே திரண்டு தடுப்புகளை தள்ளியதால் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 15 பேருக்கு எதிராக 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் காவலில் எடுக்கப்பட்டனர்.
144 தடை உத்தரவு அமலில்
பொது அமைதி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், தீபம் ஏற்ற அனுமதி கிடைக்காதது தொடர்பாக ராம. ரவிக்குமார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் மீண்டும் முறையிட்டார். அதன் பேரில், அவர் மற்றும் குழுவினர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் செல்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், 144 தடை அமலில் இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் தெரிவித்தார்.
சுமார் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்து அமைப்பினர் புறப்பட்டுச் சென்றனர்.
