பணமதிப்பிழப்பு – 237 கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் கடன் கொடுத்த சசிகலா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சசிகலா, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட போது, அன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை தம்மிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஏராளமான அசையா சொத்துகளை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

சொத்துளை யாரிடம், எவ்வளவு தொகைக்கு சசிகலா வாங்கினார் என்பதும், இதில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கைமாறியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் மூலம் பல்வேறு பணபரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வரும் திருச்செங்கோடு கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவன அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் கொடுத்துள்ளார்.

மேலும் ஆண்டுக்கு 6% வட்டியுடன் 237 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தர ஒப்புக்கொண்டதாக குமாரசாமி தெரிவித்ததாகவும் வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ரூ.101 கோடியும், அதே ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரூ.136 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வருமான வரித்துறை விசாரணையில் வெட்டவெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறித்து “தி இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பணிமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில் ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை சசிகலா வாங்கி குவித்தார் என்றும் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 30- ஆம் தேதி வரை இந்த பணபரிமாற்றம் நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/