ஏழைகளுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை – ரகுராம் ராஜன்
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தில் ஏழை மக்களுக்கு உதவ நமக்கு ரூ. 65,000 கோடி தேவைப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் லாக்டவுன் போன்றவைகள் சர்வதேச பொருளாதாரம் குறித்த புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 2-வது அல்லது 3-வது லாக்டவுன் என்பது பொருளாதாரத்தில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும். அது சாத்தியமானதும் அல்ல.
ஏழைகளுக்கு உதவுவதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என ராகுல் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்திலே வைத்திருப்பது என்பது மிகவும் எளிதானது தான், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானததாக இருக்காது. ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றுவதற்கு தற்போது, நமக்கு ரூ.65,000 கோடி தேவை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும். இதுபோன்று கட்டுபாடுகளை தளர்த்தும்போது, யாரேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
கொரோனா தாக்கத்தை இந்தியாவில் இருந்து 100% வெளியேற்ற முடியாது. அது சாத்தியமற்றது. நமது பரிசோதனை முறைகள் மிகவும் வேறுபட்டதாகவும் இருக்கிறது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
Comments are closed.