முதல்வர் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்து

சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் முதல் கையெழுத்தாக, கொரோனா நிவாரணமாக, ரூ.4000 ஆயிரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

ஐந்து கோப்புகளில் ஸ்டாலின் கையெழுத்து

  1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.
  2. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
  3. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
  4. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
  5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


Comments are closed.

https://newstamil.in/