மீண்டும் தி.மு.க.,வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம்

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவரது தாத்தா பி.டி.ராஜன் திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர். தந்தை பழனிவேல் ராஜன் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் இருந்தவர். அந்த வகையில் மூன்றாம் தலைமுறையாக திராவிட இயக்கத்தில் பயணித்து வருகிறார் பழனிவேல் தியாகராஜன்.

தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நிதி அமைச்சர் பதவி, தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்த தியாகராஜன், சரிவர செயல்படாத மூத்த அமைச்சர்களின் துறைகள் குறித்து, வெளிப்படையாக விமர்சித்தார்.

மூத்த அமைச்சர்களின் கோப்புகளுக்கு கூட, ஒப்புதல் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். அதிருப்தி அடைந்த மூத்த அமைச்சர்கள், முதல்வரிடம் தியாகராஜன் மீது புகார் தெரிவித்தனர். அந்த நேரம் பார்த்து, முதல்வர் குடும்பத்தினரை விமர்சித்து பேசிய வீடியோ பதிவு வெளியானது; அது தியாகராஜன் பதவிக் குறைப்புக்கு காரணமாக அமைந்தது.

நிதி அமைச்சர் பதவியில் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அவர் மாற்றப்பட்டார். கட்சி விவகாரத்திலும் ஓரங்கட்டி வைக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசக் கூடாது என, அவருக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டது.

இப்படி தனக்கு முக்கியத்துவம் குறைந்தாலும், தன் சொந்த தொகுதியான மதுரை மத்தியில், மக்கள் நலத் திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார். செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தஅறிக்கையையும், முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

இதற்கிடையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில், அமைச்சர் தியாகராஜனும் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், முதல்வருடன் அமைச்சர் தியாகராஜனும் பங்கேற்றார்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறனை, அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தபோதும், முதல்வருடன் தியாகராஜன் மட்டுமே இருந்தார். இதன் வாயிலாக, முதல்வருடனான தன் நெருக்கத்தை, தியாகராஜன் மீண்டும் உறுதிபடுத்தி இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.Comments are closed.

https://newstamil.in/