விசிக, ஐயூஎம்எல் குறித்து ஆ.ராசா சர்ச்சை பதிவு; பெண்களை இழிவுபடுத்தும் குறித்து: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இணைவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்ததையடுத்து, இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வன்னியரசு அமைச்சராக பதவியேற்றார். இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் கருத்துகள் தற்போது சர்ச்சையின் மையமாக மாறியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி அமைப்புகள் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாக மாறியது. இதேசமயம், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பிடித்தது. தொடர்ந்து விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிகளும் தவெக அரசில் பங்கேற்கும் நிலை உருவானது.
இந்த சூழ்நிலையே திமுகவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது.

அந்த பதிவில், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளை மறைமுகமாக கடுமையாக விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். சிலர் அந்த பதிவை அரசியல் விமர்சனமாக எடுத்துக்கொண்டாலும், பலரும் அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் எழுந்தது.
ராசாவின் பதிவு வேகமாக வைரலானது. திமுக ஆதரவாளர்கள் அதை பகிர்ந்த நிலையில், எதிர்க்கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆ.ராசா அந்த பதிவை பின்னர் நீக்கினார்.
ஆனால் அதில் முடிவில்லை. பின்னர் மீண்டும் எக்ஸ் தளத்தில் அவர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ‘முடத்தெங்கு’. அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவும் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி மறைமுகமாக ஆ.ராசாவை விமர்சித்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், “அதிகாரம் எளியவர்களுக்கு கிடைப்பது சிலருக்கு ஆத்திரமாக இருக்கலாம். ஆற்றாமையால் வீசப்படும் அவதூறுகள் எங்களை அசைக்காது. அநாகரீகத்தை தவிர்க்கவே அமைதியாக இருக்கிறோம். ஆனால் அநீதி தொடர்ந்தால் அதற்கு பதில் சொல்ல தயங்கமாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆ.ராசாவின் கருத்துகளும், அதற்கு விசிக தரப்பிலிருந்து வந்த பதில்களும் தற்போது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, தவெக அமைச்சரவையில் புதிய கூட்டணிகள் உருவாகும் சூழலில், திமுக-விசிக உறவு எவ்வாறு நகரும் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
