விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு
‘பிகில்‘ படம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஐடி., ரெய்டு தொடர்பாக, பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் இன்று அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியது, பாஜக ஆர்ப்பாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது சோதனை அல்ல, கடந்த மாதம் நடந்த சோதனையின் போது சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. சீல் அகற்றும் பணி தற்போது நடந்துவருகிறது என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.