‘பார்ட்டி ஃபண்ட்’ என விஜய் கூறிய ஒரு வார்த்தை… சட்டசபையில் பரபரப்பு; ஓட்டம் எடுத்த திமுக!
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடும் அரசியல் மோதலுக்கு வழிவகுத்தது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் கூறிய ஒரு கருத்து, அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாதத்துக்கு பதிலளித்து பேசிய விஜய், முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் “பார்ட்டி ஃபண்ட்” என்ற பெயரில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினார். தனது அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வருவாய்கள் நேரடியாக அரசின் கணக்கில் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய் தனது உரையில் “பார்ட்டி ஃபண்ட்” என்ற வார்த்தையை குறிப்பிட்டவுடன், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பலரும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து கூச்சலிட்டதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் பலமுறை அமைதியை வேண்டுகோள் விடுத்தபோதும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தைரியம் இருந்தால் எந்தக் கட்சியை குறிப்பிடுகிறீர்கள் என்று நேரடியாக சொல்லுங்கள்” என சவால் விடுத்தார்.
அதற்கு பதிலளித்த விஜய், “மீண்டும் ஆணித்தரமாக சொல்கிறேன். அந்த பார்ட்டி ஃபண்ட் ஊழலை நாங்கள் நிச்சயம் ஒழிப்போம்” என்று கூறினார். இதன் பின்னர் அவையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அமளிக்குப் பிறகு, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக சட்டசபை நடவடிக்கைகள் சில நேரம் பரபரப்பாக காணப்பட்டன.
முதல்வர் விஜயின் பதிலுரை மொத்தம் 45 நிமிடங்கள் நீடித்தது. தனது ரசிகர் மன்ற காலம் முதல் மக்கள் இயக்கம், அரசியல் பயணம், ஆட்சிப் பொறுப்பேற்றது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், ஈழத் தமிழர்களுக்காகவும் மீனவர்களின் உரிமைக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், தனது அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.
சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசிய விஜய், டிஜிபி நியமனம் தாமதமானது உள்ளிட்ட சில நிர்வாக குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார். விவசாயிகள் போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளையும் அவர் விமர்சித்தார்.
அவரது உரையின் இறுதிப்பகுதியில் முன்வைக்கப்பட்ட “பார்ட்டி ஃபண்ட்” குற்றச்சாட்டே அவையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய முக்கிய அம்சமாக மாறியது. அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அடுத்த சில நாட்களும் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
